உலக கோப்பை தொடருக்கான விளம்பர கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்.,19 முதல் ஏப்., 2 வரை நடக்க உள்ளது. இதில், மொத்தம் 49 போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்' ரூ. 9 ஆயிரத்து 126 கோடி கொடுத்து பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது.
பன்மடங்கு அதிகரிப்பு:
இந்திய அணி லீக் சுற்றை கடந்து, "நாக்-அவுட்' முறையிலான காலிறுதியை எட்டும்பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அப்போது விளம்பர கட்டணத்தை 6 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வரை வசூலிக்கப்பட உள்ளது.
இது குறித்து ஈ.எஸ்.பி.என்., விளம்பர பிரிவு துணை தலைவர் சஞ்சய் கைலாஷ் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்படும். "நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினால், விளம்பரங்கள் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்படும். அந்த நேரத்தில், தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படும்,''என்றார்.
தூர்தர்ஷன் ஒப்பந்தம்:
ஈ.எஸ்.பி.என் சேனலுடன் சேர்ந்து தூர்தர்ஷனும்("டிடி') உலக கோப்பை போட்டியை ஒளிபரப்ப உள்ளது. ஹீரோ ஹோண்டா, பார்லே, ஜெய்பி சிமென்ட், ரிலையன்ஸ் மொபைல், பெப்சி, டாடா மோட்டார்ஸ், போன்றவை தூர்தர்ஷனுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து ரூ. 75 கோடி வரை ஈ.எஸ்.பி.என்., சேனலுக்கு வழங்கப்பட உள்ளது.
வருமானம் உயரும்:
பிரபல "ஜெனித் ஆப்டிமீடியா' விளம்பர நிறுவனத்தின் துணை தலைவர் நவீன் கேம்கா கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், புதிய நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க முன்வரும். அப்போது "டிமாண்ட்' அதிகரிக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி, தனது விளம்பர வருவாயை ஈ.எஸ்,பி.என்., சேனல் அதிகரித்துக் கொள்ளும்,''என்றார்.
Comments
Post a Comment