ஹிந்து மதமும்; காக்கைகளின் அறியாமையும்!-ப.லட்சுமி, எழுத்தாளர்

 

'கேனப் பைய ஊருல கிறுக்குப் பய நாட்டாமை' என்று கிராமப்புறங்களில் ஒரு சொலவடை சொல்வர். அதுபோல இருக்கு தமிழகத்தின் இன்றைய நிலைமை!

சில நாட்களுக்கு முன் இயக்குனர் வெற்றி மாறன், 'திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது போல், ராஜராஜ சோழனை ஹிந்துவாய் காட்சிப்படுத்தியுள்ளனர்...' என்று திருவாய் மலர்ந்தார்.

உடனே, 'ஆமாஞ்சாமி... நானும் அரசியலில் உள்ளேன் சாமி...' என்று, 'அட்டடென்ஸ்' போடும் வகையில், சைமன் செபாஸ்டியன் என்ற சீமான், 'ஆமா... திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது போல், எங்க முப்பாட்டன் ராஜராஜ சோழனை ஹிந்துவாக காட்ட முயற்சிக்கின்றனர்...' என்றிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனோ, 'ராஜராஜ சோழன் காலத்தில் ஹிந்து மதமே இல்லை...' என்று கூறியுள்ளார்.

அப்படியானால், 1969க்கு முன் வரை தமிழ்நாடு என்று ஒரு நாடே கிடையாது... சோழ நாடு, பாண்டிய, பல்லவ நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என்று தான் இருந்தன.

இங்கு யார் ஹிந்து?



அதற்காக, இப்போதும் வெற்றிமாறன், சீமான், திருமாவளவன், கமல்ஹாசன் போன்றோர், பொதுவெளியில் தங்களை கொங்கு நாட்டவன், நாஞ்சில் நாட்டவன், பாண்டிய நாட்டவன் என்றா அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்? தமிழ் நாட்டவன் என்று தானே சொல்கின்றனர்?


ராஜராஜ சோழன் ஹிந்து இல்லை என்றால், இங்கு யார் ஹிந்து?



ராஜராஜ சோழன், தான் கட்டிய கோவில்களில், விநாயகர், முருகன், சக்தி தேவி, திருமால், சூரியனுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யவில்லையா?

அக்கடவுள்களுக்கு சன்னிதிகள் தான் அமைக்கவில்லையா? எதை வைத்து ராஜ ராஜ சோழன் ஹிந்து இல்லை என்று சொல்கிறீர்கள்?

சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சக்தி தேவியை பிரதானமாக கொண்டு வழிபடும் சாக்தம், சூரியனை வழிபடும் சவுரம், முருக கடவுளை வழிபடும் கவுமாரம், விநாயகரை வழிபடும் காணாபத்தியம், இவர்கள் அனைவரையும் வழிபடும் ஸ்மார்த்தம் என ஏழு மதங்களை உள்ளடக்கியதே ஹிந்து மதம்!

இம்மதங்களை இணைத்து, ஒரே ஹிந்து மதமாக்கியவர் ஆதி சங்கரர்.

 

இம்மதங்களின் வழிபாட்டு முறைகளாகட்டும், அதன் சாரம், தர்மம் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது; பிரித்து பார்க்க முடியாதது.

சூரியனையும், கணபதியையும் தவிர்த்து, மற்ற அனைத்துமே தமிழனின் திணை வழி தெய்வங்கள்!

ஹிந்து மதத்தின் அடையாளமே, தமிழன் தான். அப்படியிருக்கும் போது, ராஜராஜ சோழனை, ஹிந்துவாக காட்டாமல் யாராக காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

வெற்றி மாறனை விடுங்கள்... அவருக்கு ஒரு படம், 'ஊத்தி'க் கொண்டால், கூகுளில் தேடினாலும் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது!


ஆனால், 'என் முப்பாட்டன் முருகன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன் சிவன்...' என்று சொந்தம் கொண்டாடும் செபாஸ்டியன் எனும் சீமான் அவர்களே...

நம் முப்பாட்டன் முருகனுக்கு, கந்தன், கடம்பன், கதிர்வேலன், கார்த்திகேயன்... என்று ஏகப்பட்ட பெயர்கள் உண்டு... அதில், செபாஸ்டியன் என்று எந்த பெயரும் இடம் பெறவில்லையே...

உங்களுடைய இன்னொரு சமீபத்திய முப்பாட்டன் ராஜ ராஜ சோழனுக்கு ஏகப்பட்ட பெயர்கள்... அந்த பெயர்களையும், அதன் விளக்கத்தையும் எழுதினால், கண்டிப்பாக நுாறு பக்கம் வரும்... அதில் ஒன்றில் கூட செபாஸ்டியன் என்று பெயர் இடம் பெறவில்லையே...

அப்புறம் எப்படி நீங்கள் இவர்களை எல்லாம் முப்பாட்டன் என்று நெஞ்சு துறுத்த வீர வசனம் பேசுகிறீர்?

செபாஸ்டியனுக்கு, முருகன் முப்பாட்டனாக ஆகும் போது, ராஜராஜ சோழன் கொள்ளுத் தாத்தா ஆகும் போது, சைவ நெறிக்குள் வைணவமும், வைணவத்துக்குள் சைவமும் நீக்கமற நிறைந்திருக்கும் ஹிந்து மதம் மட்டும், ராஜ ராஜ சோழனுக்கு சொந்தம் இல்லையா?


அப்புறம் அதென்ன... 'திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுகின்றனர்!' என்று நொடிப்பு? திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசாமல், வேட்டியும், தொப்பியும் அணிவிப்போமா... அல்லது கிறிஸ்துவ மத போதகர்கள் அணியும் வெள்ளை அங்கியை அணிவித்து அழகு பார்ப்போமா...


தமிழனின் அடையாளம்



இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம் வரும் முன்பே இருந்தவர் திருவள்ளுவர் எனில், மேற்குறிப்பிட்ட சைவம், வைணவம் உட்பட்ட ஏழு மதங்களைச் சேர்ந்தவராகவோ, புத்த மதத்தினராகவோ அல்லது அருக கடவுளை வணங்கிய சமணராகவோ இருந்திருக்க வேண்டும்...

இவர்களை தவிர வேறு யாராகவும் திருவள்ளுவர் இருந்திருக்க முடியாது எனும் போது, மேற்குறிப்பிட்ட மதத்தினரின் பக்திக்கு உரிய உடையே காவி எனும் போது, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்காமல், ஈ.வெ.ரா.,வின் கறுப்புச் சட்டையையா கழற்றி வந்து திருவள்ளுவருக்கு அணிவிக்க முடியும்?

அதை அவரே ஏற்க மாட்டார். ஏனெனில், அவர் தான் திருக்குறளையே, 'மலம்' என்று சொன்னவராச்சே!

சிவன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது உண்மையானால், தமிழின் பிறப்பிடம் சிவன் என்பது உண்மையானால், அந்த சுடுகாட்டு இடையனின் வம்சாவளி நாம் என்பது உண்மையானால், திருநீறு என்பதுதமிழனின் அடையாளம்.




அந்த அடையாளத்தை செபாஸ்டியனான சீமானும், பின் வாசல் வழியாக மதம் மாறி, கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது விபூதியை நீக்கி விட்டு வந்த திருமாவளவன் போன்றோர், தேர்தல் சமயங்களில் மட்டும் உரிமையுடன் ஹிந்து மதத்தை கையில் எடுக்கும் போது, சுத்த தமிழனான திருவள்ளுவருக்கு அந்த அடையாளத்தை கொடுக்கக் கூடாதா?

கொடுக்கக் கூடாது என்பது தான், தமிழக அரசின் நோக்கமுமாக இருக்கிறது. இல்லையென்றால், வள்ளலாரின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட ஆட்சியாளர்கள், வள்ளலார் நெற்றியிலிருந்து திருநீற்றை நீக்கி, அவர் புகைப்படத்தை வெளியிட துணிவரா?

இவர்கள் வீட்டு பெண்மணிகள் நெற்றியில் திருநீற்று பட்டை அடிக்கலாம்; ஆனால், ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ் ஜோதியான சிவபெருமானை நினைத்து கசிந்துருகி ஜோதி ரூபமான வள்ளலாரில் நெற்றியிலிருந்து திருநீற்றைத் அழித்தெறிவர். கேட்டால், இது தான் 'திராவிட மாடல்' ஆட்சி என்பர்!

திராவிட மாடல் ஆட்சியாளருக்கு, ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதவர்களுக்கு, சைவ சித்தாந்தவாதியான வள்ளலாரின் விழாவில் என்ன வேலை என்று நினைத்தேன். இப்போது தான் புரிகிறது... திருநீற்றை அழிந்தெறிவது தான், அவர்களின் முழுநேர வேலை என்பது!

அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி தான் தி.மு.க., அதுவும், அதிலிருந்து பிரிந்து போன அ.தி.மு.க.,வும், ஏன் பரம வைரிகளாய் இருக்கின்றனர்? ஏன் சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., கைது செய்யப்பட்டார்? ஏன் கருணாநிதியை போலீஸ் குண்டுக்கட்டாய் துாக்கிச் சென்று கைது செய்தது?

இரு கட்சிகளும் திராவிட பாரம்பரியம் கொண்டது தானே... எதற்கு இந்த முட்டல் மோதல்... எல்லாம், 'தான்' எனும் ஆணவத்தில் வந்தது தானே... இது மனித சுபாவம்!


நுால்களை படியுங்கள்



மனிதன் அவன் சிற்றறிவுக்கு எட்டியவரை எதை உயர்ந்த மார்க்கமாக, நெறியாக, கொள்கையாக உருவகம் செய்து கொள்கிறானோ அதை உயர்த்திப் பிடித்தலும், அதற்கான பற்றுதலில், சிறிது மூர்க்கமாக நடந்து கொள்வதும் மனித இயல்பு.

அதைத் தான் சில நுாற்றாண்டுகளுக்கு முன்பு சைவர்களும், வைணவர்களும் கடைப்பிடித்தனர். மற்றபடி இரு மார்க்கமுமே ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை அறிய வேண்டுமானால், சைவ சித்தாந்தம், அத்வைதம், துவைதம், வைணவ சித்தாந்த நுால்களை முதலில் படியுங்கள்!

தமிழர்களின் திணை வாழ்வியல் நெறிப்படி திருமால் தமிழ் கடவுள் என்றால், அந்த திருமாலைத் தான் விஷ்ணு, கிருஷ்ணன், கண்ணன், பரந்தாமன், பெருமாள் என்று வடமாநிலத்தார் கொண்டாடுகின்றனர்.

சிவன் தமிழ் கடவுள் என்றால், அந்த சிவனின் இருப்பிடமே கைலாயம் தான்; அவனின் ஆதித் திருத்தலமாக கருதப்படும் பசுபதீஸ்வரர் கோவில் இருப்பது நேபாளத்தில்!

தமிழின் சங்க பலகை தாங்கிய கடவுள் சிவபெருமான் என்றால், அந்த சடைமுடியன், இடுகாட்டு வாசி பெண் எடுத்ததே இமயவரம்பனின் மகளான வடமாநில பார்வதி தேவியைத் தான்!

கடவுளே வடக்கு, தெற்கு பார்ப்பது இல்லை; மொழியையும் பிரித்துப் பார்ப்பதில்லை. இதில் நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளைத்த காளான்கள் எல்லாம், 'சிவன் என் முப்பாட்டன்... அவனுக்கு கோவில் எழுப்பியவன் என் கொள்ளுப் பாட்டன்... அவனை எப்படி ஹிந்து மதத்தில் சேர்க்கலாம்' என்று இல்லாத வீரத்தை காட்ட வீராவேசமாக கிளம்பி வந்துட்டாங்க!

இன்னும் சிலர் இருக்கின்றனர்... 'ஹிந்து மதத்தை ஒழிப்போம்; சனாதனத்தை வேரறுப்போம்...' என, ஏதோ பக்கத்து வீட்டு பாட்டிக்கு தோசை சுட்டு தருவது போல வீர முழக்கம் இடுகின்றனர்.

வரலாறு தெரியாதவர்கள் இவர்கள்! முகலாயர்கள் வந்தனர்... கோவில்களில் கொள்ளை அடித்தனர்; சிலைகளை உடைத்தனர்... வழிபாட்டு தலங்களை இடித்து, அதன் மீது சமாதிகளை கட்டினர்... கடைசியில் என்ன ஆயினர்...

பெற்ற பிள்ளைகளாலும், உடன் பிறந்த சகோதரர்களாலும் அழிந்து போயினர்... ஹிந்து மதம் அழியவில்லை!

தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் வந்தனர்... பிரிவினையை விதைத்து, அதை அறுவடை செய்யும் விதமாக, மதமாற்றம் செய்தனர்... ஆனாலும், ஹிந்து மதம் அதன் ஜீவ சக்தியை இழக்கவில்லை.

இப்படி மன்னாதி மன்னர்கள் எல்லாம் மண்ணைக் கவ்வி போய் விட்டனர்; இப்போது இந்த மண்ணுளி பாம்புகள், வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் கூவித் திளைக்கின்றன... கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது!


அறிவில் ஏற்பட்ட கோளாறு



ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது... இந்த 'லெட்டர் பேடு' கட்சியினர் இதுவரை பிரபாகரனை வைத்தும், இலங்கைத் தமிழர்களை வைத்தும் அரசியல் செய்து, பிழைப்பை ஓட்டினர். இப்போது, அரசியல் செய்ய ஒன்றும் கிடைக்கவில்லை... ஹிந்து மதத்தை கையில் எடுத்துள்ளனர் என்று!

உண்டு குணம் இங்கொருவர்க் கெனினும்கீழ்

கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்

சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ

காக்கை விரும்பும் கனி! - என்கிறது நன்னெறி!

இதன் அர்த்தம் என்ன தெரியுமா...

அழகிய பசுமையான சோலையில் வண்டுகள் மலர்களாகிய படுக்கையை விரும்பி அதில் மேவும்.

ஆனால், காகங்களோ அந்தச் சோலையிலுள்ள கசப்பான வேப்பம் பழத்தை விரும்பி உண்ணும். இது அந்த வனத்தின் தவறு அல்ல; காக்கைகளின் குணத்தில், அறிவில் ஏற்பட்ட கோளாறு. இதைப்போன்று தான், இந்த பிரிவினை சக்திகளும்!

ஆதி மனிதனின் வழிபாட்டு முறைகள் அடங்கிய தொன்மையான மூத்த மதம், ஹிந்து மதம்.

ஹிந்து மதமாக உருப்பெற்றது வேண்டுமானால் இடைக்காலமாக இருக்கலாம். ஆனால், அதன் கட்டுவிப்பு மற்றும் அடிப்படை ஒன்றில் ஒன்று கலந்தது. அது மனித வாழ்வியலின் தர்மங்களை வகைப்படுத்துகிறது.

அதன் சாராம்சங்களை முழுவதும் அறியாத மூடர்கள், மேற்கூறிய நன்னெறி பாடலைப் போல், வேப்பம் பழத்தை தேடிச் சென்று புசிக்கும் காக்கைகளை போல, காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை கையில் எடுத்து, 'இது தான் ஹிந்து மதம்...' என்று பிதற்றுவர்.

கற்று தேர்ந்த அறிஞர்கள் அறிவர், இந்த காக்கைகளின் அறியாமையை!



-ப.லட்சுமி, எழுத்தாளர்.










Comments

Popular posts from this blog

HISTORY OF COMPUTER DATA STORAGE A STAGE BY STAGE PICTORIAL PRESENTATION

Inspired and visited Hindu temple by Me and My friends in and around Kumbakonam- Aduthurai

Gandhi Age is the Dark Age of India